
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் லெவனில் வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி அபாரமான பந்துவீச்சின் மூலம் இந்திய அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இப்போட்டியில்10 ஓவர்களை வீசிய வருண் சக்ரவர்த்தி 42 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார். இதனால் அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் வருண் சக்ரவர்த்தி இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் கிடைக்கவில்லை.