
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் வங்கதேச அணி கடுமையாக போராடிய நிலையிலும் இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியில் விளையாடுகிறது.
மேலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கியமானது என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஷகிப் அல் ஹசன் இல்லாத போதிலும் வங்கதேசம் ஆபத்தான அணியாகவே உள்ளது என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார்.