
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 41 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் 120 ரன்களையும், பென் டக்கெட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 317 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.