
இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மார்ச் 04ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆஃப்கானிஸ்தான் தொடரின் போது நடுவரை விமர்சித்தாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு ஐசிசி 3 கரும்புள்ளிகளை வழங்கியுள்ளது. மேலும் அவர் கடந்த 24 மாதங்களுக்குள் 5 கரும்புள்ளிகளைப் பெற்றுள்ளதால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாட வநிந்து ஹசரங்காவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரின் முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இத்தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த பதும் நிஷங்கா காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதால் அவருக்கு மாற்று வீரராக அவிஷ்கா ஃபெர்ண்டோ இலங்கை டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.