
சேலம்: ஆஷிக் மற்றும் ஜெகதீசன் அகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்டன்ஸ் அணி ஹாரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஹரி நிஷாந்த் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய ராஜகோபால், கவின், விவேக் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர்.
அவர்களைத்தொடர்ந்து 47 ரன்களில் அபிஷேக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் சன்னி சந்து 30 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது 28 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரேம் குமார் 3 விக்கெட்டுகளையும், அபிஷேக், சிலம்பரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.