
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1989ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான இவர் 2013 ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அரங்கில் 100 சதங்கள் உட்பட 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அவர் 78 போட்டிகளில் 1 சதம், 13 அரைசதம் என 2334 ரன்கள் எடுத்தார். தற்போது அந்த அணியின் வழிகாட்டியாக இருந்து வருகிறார் சச்சின். அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் விளையாடி வருகிறார்.
சமூக வலைதளைங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வரும் சச்சின் டெண்டுல்கர் இன்று, #AskSachin என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். இந்நிலையில், சச்சினிடம் ஒரு ரசிகர், “வான்கடே தவிர இந்தியாவில் உங்களுக்கு பிடித்த மைதானம் எது?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள சச்சின் “சேப்பாக்கம் ” என்ற பதிலைக் கூறினார்.