
இந்தியாவின் பல்வேறும் நகரங்களில் நடைபெற்று வந்த நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்து சௌராஷ்டிரா மற்றும் மணிப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணி தரப்பில் டிஏ ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், சேட்டன் சகாரியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியில் கெவின் ஜிவ்ரஞ்சனி 9 ரன்களிலும், ஜேக்ஸன் 20 ரன்களிலும், ஹர்விக் தேசாய் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் அர்பித் வஸவதா - பெர்ரக் மன்கட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்களது சதங்களைப் பதிவுசெய்ததுடன், 152 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் கேப்டன் வஸவதா 148 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் மான்கட்டுடன் இணைந்த சட்டேஷ்வர் புஜாராவும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய சட்டேஷ்வர் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் தனது 63ஆவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார், பின் 108 ரன்களில் புஜாராவும், 173 ரன்களில் மான்கட்டும் தனது விக்கெட்டை இழந்தனர்.