
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்தன.
இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போட்டிக்கான ஜிம்பாப்வே அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. கிரேய்க் எர்வின் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ரஸா மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் கிளைவ் மடாண்டே அணியில் இடம்பிடித்திருக்கும் நிலையில், வின்சென்ட் மசேகேசா ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு ள்ளார்.