வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2021 தொடரின் 2ஆவது பகுதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கடைசி இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெயில் இடம் பிடித்தார். முதல் போட்டியில் 14 ரன்களும், 2ஆவது போட்டியில் 1 ரன்னும் எடுத்தார்.
இந்நிலையில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று தாக்காமல் இருக்க வீரர்களுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக சோர்வு ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு கிறிஸ் கெயில் வந்துள்ளார்.