
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடியான தொடக்கத்தாலும், மார்கஸ் ஸ்டொய்னிஸின் அபாரமான ஃபினிஷிங்காலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 39 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 30 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜார்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் 202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பில் சால்ட் 37 மற்றும் ஜோஸ் பட்லர் 42 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் ஒருபக்கம் ரன்கள் சேர்த்த போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.