
சமகால கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகிவுள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.
இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவருக்கு இந்திய அணி பங்கேற்று விளையாடிய சில கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஃபார்ம் அவுட்டில் இருந்து கோலி மீண்டு வருவார் என ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.