
New Zealand T20 Squad: ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீரராக டெவான் கான்வே சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான இந்த அணியில் பென் சீயர்ஸ், லோக்கி ஃபெர்குசன், கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை.
மேற்கொண்டு நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்திருந்த ஃபின் ஆலன் காயம் காரணமாக முத்தரப்பு தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக தற்சமயம் டெவான் கான்வே மீண்டும் நியூசிலாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.