
இந்தியாவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டியாக கூச் பெஹார் கோப்பை நடைபெறும். இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தின. சிவம்மோஹா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 380 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணியின் தரப்பில் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் டிராவிட் வேகபந்துவீச்சாளராக இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனை அடுத்து கர்நாடக அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
இதில் கர்நாடகா சார்பில் களமிறங்கிய பிரகார் சதுர்வேதி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் அவர் 256 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து இன்று தன்னுடைய ஆட்டத்தை பிரகார் சதுர்வேதி தொடங்கினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய பிரகார் சதுர்வேதி விக்கெட்டை எடுக்க மும்பை அணி எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.