
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியானது 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களைச் சேர்த்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவற, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் 50 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்றவர்கள் சோபிக்க தவறினர். ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா தரப்பில் குவேனா மபாகா, கார்பின் போஷ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி வெற்றியைப் பதிவுசெய்தது.