Advertisement

புஜாராவுக்கு தடைவிதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்; ரசிகர்கள் அதிர்ச்சி!

சக வீரர்கள் நன்னடத்தையை மீறி நடந்து கொண்ட போது அதை கேப்டனாக புஜாரா கட்டுப்படுத்துவதற்கு தவறியதாலேயே இந்த தண்டனை விதிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan September 19, 2023 • 12:18 PM
புஜாராவுக்கு தடைவிதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்; ரசிகர்கள் அதிர்ச்சி!
புஜாராவுக்கு தடைவிதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்; ரசிகர்கள் அதிர்ச்சி! (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் செட்டேஸ்வர் புஜாரா கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி மிகவும் மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தக் கூடியவராக தன்னை அடையாளப்படுத்தினார். அதனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பும் அளவுக்கு பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக நின்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

குறிப்பாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைக்க உதவிய அவர், அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாடி ரன் மழை பொழிந்த அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்தார்.

Trending


ஆனால் மீண்டும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் படுமோசமாக செயல்பட்டு இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த நிலைமையில் மீண்டும் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சசக்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி வரும் அவர் நல்ல செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் கவுண்டி தொடரில் ஒரு போட்டியில் விளையாட புஜாராவுக்கு அதிரடி தடை விதித்துள்ள இங்கிலாந்து வாரியம் 12 கேரியர் கருப்பு புள்ளிகளை அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த வாரம் ஹோவ் நகரில் நடைபெற்ற சசெக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷைர் அணிகள் மோதிய போட்டியில் சசக்ஸ் அணியைச் சேர்ந்த டாம் ஹெய்ன்ஸ் மற்றும் ஜாக் கார்சன் ஆகியோர் நன்னடத்தையை மீறி நடந்து கொண்டதாக தெரிகிறது.

ஆனால் அதை கேப்டனாக புஜாரா கட்டுப்படுத்துவதற்கு தவறியதாலேயே இந்த தண்டனை விதிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது கவுண்டி தொடரில் ஒரு அணியின் வீரர்கள் விதிமுறைகளை மீறினால் அதற்கு கேப்டனுக்கும் தண்டனை சேர்த்து வழங்கப்படும் என்ற விதிமுறை இருந்து வருகிறது. அதன் படி புஜாராவை போலவே ஹெய்ன்ஸ் மற்றும் கார்சன் ஆகியோருக்கும் தலா 12 புள்ளிகளும் 1 போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுவதாக இங்கிலாந்து வாரியம் கூறியுள்ளது.

இதன் காரணமாக செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் சசெக்ஸ் அணிக்காக கேப்டன் புஜாரா, ஹெய்ன்ஸ் மற்றும் கார்சன் ஆகிய மூவருமே களமிறங்க மாட்டார்கள் என்று அதன் பயிற்சியாளர் டாம் பார்பிரேஸ் கூறியுள்ளார். அதன் காரணமாக அந்த போட்டியில் டாம் அஸ்லோப் சசெக்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement