சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கயானா அமேசான் வாரியர்ஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான சிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவந்த 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கயானா அணிக்கு சைம் அயுப் - கெல்வொன் ஆண்டர்சன் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்டர்சன் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சைம் அயுப் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஷாய் ஹோப் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்,
Trending
பின் 40 ரன்களுக்கு ஷாய் ஹோப்பும், 31 ரன்களில் ஷிம்ரான் ஹெட்மையரும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அசாம் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்திருந்த அசாம் கானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. ஜமைக்கா தலாவாஸ் அணி தரப்பில் ஷமர் ஸ்பிரிங்கர், நிக்கோலஸ் கார்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா அணியில் கேப்டன் பிராண்டன் கிங் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 5 ரன்களுக்கும், அலெக்ஸ் ஹேல்ஸ் 15 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்டீவன் டெய்லர், ஷமாரா ப்ரூக்ஸ், ரெமன் ரெய்ஃபெர் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து களமிறங்கிய இமாத் வாசிம் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மாறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஜமைக்கா தலாவாஸ் அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கயானா அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி நடப்பு சிபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now