சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
ஜமைக்கா தலாவாஸிற்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
கரீபியர்ன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11அவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கயானா அணியில் சைம் அயூப், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ஷாய் ஹோப், அசாம் கான் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் இணைந்த ஷிம்ரான் ஹெட்மையர் - கீமோ பால் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Trending
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 60 ரன்கள் ரன்களில் ஹெட்மையரும், 57 ரன்களுக்கு கிமோ பாலும் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் கயானா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. ஜமைக்கா அணி தரப்பில் முகமது அமிர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் கிரீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான பிராண்டன் கிங், மெக்கன்ஸி, ஷமாரா ப்ரூக்ஸ், அமிர் ஜங்கூ, ரேமன் ரெய்ஃபெர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் இணைந்த இமாத் வசிம் - ஃபாபியன் ஆலன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இமாத் வசிம் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆலன் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இமாத் வசிமும் 63 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் போதிய ரன்களை சேர்க்க முடியாததால், 18.4 ஓவர்களில் ஜமைக்கா தலாவாஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now