
12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணி பந்துவீசை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணிக்கு ரியான் ரெய்ஃபெர் - அசாம் கான் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரெய்ஃபெர் 5 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய குடகேஷ் மோட்டி 8 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 15 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் அணியின் தொடக்க வீரர் அசாம் கான் 29 ரன்களிலும், அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 13 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்த நிலையில், கயானா அணி 85 ரன்களுகே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் மொயீன் அலி அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் முகமது அமீர் மற்றும் இமாத் வசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணிக்கு இப்போட்டியிலும் தொடக்கம் என்பது சரியாக அமையவில்லை.