
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாட, முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பானது 49 ரன்களை எட்டியது. அதன்பின் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இருவரும் தலா 26 ரன்களை எடுத்திருந்தந் இலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிம்ரான் ஹெட்மையர் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஷாய் ஹோப்பும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரொமாரியோர் ஷெப்பர்ட் தனது பங்கிற்கு 16 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுப்பக்கம் விளையாடிய கீமோ பால், மொயீன் அலி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.