
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேசி கார்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து இருவரும் இணைந்த பவுண்டரி மழையை பொழிந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 97 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன்மூலம், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 250 ரன்களைச் சேர்த்து அசத்தியது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளையும், ரியான் ஜான், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையடைய பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆண்ட்ரே ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றியும், கைல் மேயர்ஸ் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.