
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கயானா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து சத்தினார்.
மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 79 ரன்களைக் குவித்த ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து பொறுப்பாக விளையாடி வந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களில் ஆட்டமிழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 18 ரன்களிலும், டிம் செய்ஃபெர்ட் 18 ரன்களிலும், மேத்யூ ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வைஸ் 13 ரன்களைச் சேர்த்தார்.