
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியில் கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த எவின் லூயிஸ் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் இணைந்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸ் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 92 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லூயிஸ் 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இதன்மூலம் பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்களைக் குவித்து அசத்தியது. செயின்ட் லூசியா கிங்ஸ் தரப்பில் டேவிட் வைஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 2 ரன்களிலும், அகீப் 6 ரன்களிலும், ஜான்சன் சார்லஸ் 12 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.