
12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதுடன், தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்தனர். மேற்கொண்டு முதல் விக்கெட்டிற்கு 145 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார்.
அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 89 ரன்களைக் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் டிம் செய்ஃபெர்ட் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைக் குவித்தது.