
கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 28அவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ரயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் ரன்கள் ஏதுமின்றியும், பேரிஸ் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேசி கார்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் நிக்கோலஸ் பூரன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 32 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் இணைந்த கேப்டன் கீரன் பொல்லார்ட் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இணையும் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் 4 சிக்ஸர்கள் என 42 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.