
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக ரக்கீம் கார்ன்வால், அலிக் அதானாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து கிளார்க் 18 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
இதற்கிடையில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்த குயின்டன் டி காக்கும் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். இதன்மூலம் அவர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 59 ரன்களைக் குவித்தார். அவருக்கு துணையாக விளையாடிய டேவிட் மில்லர் 19 ரன்களையும், கேசவ் மஹாராஜ் 14 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வக்கார் சலாம்கெயில் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்கமும் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றியும், ஜேசன் ராய் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.