
நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சந்தீப் லமிச்சானே. சுழற்பந்து வீச்சாளராக சிறப்புடன் விளையாடிய சந்தீப் மீது கவுசாலா காவல் துறையிடம் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பாலியல் வன்கொடுமை புகார் கூறினார்.
கடந்த ஆகஸ்டு 21ஆம் தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புகார் அளித்த 2 நாட்களுக்கு பின் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே நாளில் அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
இதன்பின், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்தீப், உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர்.