
சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. டி20 தொடரை வங்கதேச வீரர்கள் கொண்டாடியதன் விடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தது.
இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய ஊழியரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் லங்கரின் பெயரும் அடிபட்டது. இதனால் லங்கரின் பதவிக்கு ஆபத்து எழுந்துள்ளதாகத் தகவல் பரவியது. இந்நிலையில் லேங்கருக்கு ஆதரவளித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியதாவது,“2018ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது முதல் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் லங்கர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அனைத்து ஆஸ்திரேலிய மக்களும் பெருமைப்படும் விதத்தில் எங்கள் அணி உள்ளது.