
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. புதிய அட்டவணையின் படி பிளே ஆஃப் போட்டிகள் 29ஆம் தேதி முதலும், இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிகள் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய வீரர்கள் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட இந்தியா திரும்புவார்களா இல்லையா என்பது ரசிகர்களின் மத்தில் பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்பினால், அவர்கள் இதற்காக இந்தியா திரும்பலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.