
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட் கோலி, தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் மோசமான தோல்வி அடைந்தத் தொடர்ந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திச்சென்ற கோலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்தில் பல்வேறு குறிப்பிடத்தகுந்த, மறக்க முடியாத வெற்றிகளை அணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே அதிகமான வெற்றிகளைடெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமை கோலிக்கு மட்டும்தான் உண்டு.
கோலியுடன் அதிகமான நட்பும், நெருக்கமாகவும் இருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்விட்டரில் கோலிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ விராட், தலைநிமிர்ந்து கவுரமாக துணிச்சலாக செல்லுங்கள். கேப்டனாக நீங்கள் செய்த சாதனைகளை உலக கிரிக்கெட்டில் சிலர்தான் செய்துள்ளார்கள். இந்தியஅணியின் வெற்றிகரமான, ஆக்ரோஷமான கேப்டன் உறுதியாக நீங்கள்தான். இருவரும் சேர்ந்து அணியைக் கட்டமைத்த நிலையில் இந்த செய்தி எனக்கு உண்மையில் வருத்தமானது” எனத் தெரிவித்துள்ளார்.