
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளும் மே 17 முதல் ஜூன் 03ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தேர்வுசெய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க அணியில் 8 வீரர்கள் விளையாடி வருகின்றனர்.