
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணியில் அபினவ் மனோஹர் மற்றும் ஸ்மறன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபினவ் மனோஹர் 56 ரன்களையும் ஸ்மறன் 38 ரன்களையும் சேர்ந்தனர். பரோடா அணி தரப்பில் குர்னால் பாண்டியா, செத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பரோடா அணியில் ஷஷ்வத் ராவத் அரைசதம் கடந்ததுடன் 63 ரன்களையும், பானு பூனியா 42 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஷ்னு சொலங்கி 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பரோடா அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.