Advertisement

ஐபிஎல் 2023: சிஸ்கே vs எல்எஸ்ஜி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 03, 2023 • 11:48 AM
CSK vs LSG IPL 2023 Match 6 Dream11 Team: Ruturaj Gaikwad or Kyle Mayers? Check Fantasy Team, C-VC O
CSK vs LSG IPL 2023 Match 6 Dream11 Team: Ruturaj Gaikwad or Kyle Mayers? Check Fantasy Team, C-VC O (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது அதிகம் பேசும் வார்த்தை ஐபிஎல் தான். ஏனெனில் கடந்த வெள்ளியன்று தொடங்கிய ஐபில் தொடரின் 16அவது சீசன் முதல் ஐந்து போட்டிகளிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து வைத்துள்ளது. அந்த அளவிற்கு ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. 

அந்த வகையில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஸ்கே அணியை, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சேப்பாக்கம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் விளாசிய நிலையில் மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான மட்டைவீச்சு வெளிப்படவில்லை. மேலும் பந்து வீச்சிலும் சிஎஸ்கே வீரர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இம்பேக்ட் பிளேயர் விதியில் களமிறக்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டே 3.2 ஓவர்களை வீசி 51 ரன்களை தாரைவார்த்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஷாகரும் கூட இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறினார்.

அதேவேளையில் ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் ரன் குவிப்பை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் இறுதிக்கட்ட பந்து வீச்சின் பலவீனம் வெளிப்பட்டது. இதை இன்றைய ஆட்டத்தில் சரி செய்வதற்கான முயற்சிகளை அணி நிர்வாகம் மேற்கொள்ளக்கூடும். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆடுகளம் முற்றிலும் சுழலுக்கு கைகொடுத்திருந்தது. இதனால் சிஎஸ்கே கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் பிரசாந்த் சோலங்கிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

பேட்டிங்கில் டேவன் கான்வே, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜாஉள்ளிட்டோர் கடந்த ஆட்டத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர். சொந்த மைதானத்தில் விளையாடுவதால் இம்முறை இவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் மொயின் அலியை பந்து வீச்சில் தோனி பயன்படுத்தவில்லை. இம்முறை அவரை அணி நிர்வாகம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.

மறுபக்கம் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய கைல் மேயர்ஸ் 38 பந்துகளில் 73 ரன்கள் விளாசி அசத்தி இருந்தார். அதேபோன்று இறுதிக்கட்டத்தில் நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோர் அதிரடியாக விளையாடி சிறந்த பங்களிப்பை வழங்கினர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்தின் மார்க் வுட், சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெல்லி அணிக்கு எதிராக மார்க் வுட் 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். சுழற்பந்து வீச்சாளர்களான ரவி பிஷ்னோய், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும் அழுத்தம் கொடுக்கக்கூடும்.

சிஎஸ்கே அணி கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி இருந்தது. சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிஎஸ்கே அணி இன்று களமிறங்குவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடுவதால் சிஎஸ்கே அணி வெற்றி கணக்கை தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 01
  • சிஎஸ்கே - 0
  • எல்எஸ்ஜி -1

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கே), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கேஎல் ராகுல் (கே), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா,குர்னால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, மார்க் வூட், ஜெய்தேவ் உனட்கட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் – ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் படோனி
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மார்கஸ் ஸ்டோனிஸ், கைல் மேயர்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

கேப்டன்/துணைக்கேப்டன் - ருதுராஜ் கெய்க்வாட்/கைல் மேயர்ஸ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement