
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பிரிவில் இடம்பிடித்துள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா மற்றும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருவரும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டெம்பா பவுமா 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 103 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிக்கெல்டன் எதிர்பாரா விதமாக ரன் அவுட்டாகினார்.