
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற வாழ்வா சாவா லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இப்ராஹிமுடன் ஜோடி சேர்ந்த செதிகுல்லா அடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 12 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் செதிகுல்லா அடல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.