சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி ஆபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசிய பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் 15 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
அதன்பின் பென் டக்கெட்டுடன் இணைந்த ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 4 பவுண்டரிகளுடன் 68 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜோ ரூட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக்கும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டக்கெட் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோனும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட் 150 ரன்களைக் கடந்த அணியை நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். அதன்பின் பென் டக்கெட் 143 பந்துகளில், 17 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 165 ரன்களைக் குவித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களைக் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அதன்படி அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் சரைசதத்தை நெருங்கிய மார்னஸ் லபுஷாக்னே 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் மேத்யூ ஷார்ட் 63 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் அலெக்ஸ் கேரி இணை அபாரமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 140 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 69 ரன்களில் அலெக்ஸ் கேரி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் இங்கிலிஸ் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷ் இங்கிலிஸ் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 120 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now