
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 2 ரன்களுடன் நடையைக்கட்ட, அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மாவும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் பிலீப்ஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தர். இதனால் இந்திய அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 98 ரன்களை எட்டிய நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 79 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.