Advertisement

ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ! 

வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan October 20, 2023 • 13:16 PM
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ! 
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!  (Image Source: Google)
Advertisement

நேற்று இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தின. இந்திய அணி இந்த உலக கோப்பையில் நான்காவது போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு, அவருடைய முதல் ஓவராக அமைந்த அந்த ஓவரிலேயே, பந்தை தடுப்பதற்காக முயற்சி செய்து முட்டியில் அடிபட்டு காயம் உருவானது. இதற்குப் பிறகு மருத்துவக் குழு மைதானத்திற்கு உள்ளே வந்து சிகிச்சை அளித்தும் கூட அவரால் பந்து வீச முடியவில்லை. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா அவரை உடனே வெளியே சென்று ஓய்வு எடுக்குமாறு அனுப்பி வைத்து விட்டார்.

Trending


நேற்று போட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஹர்திக் பாண்டியா பீல்டிங் செய்ய வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஸ்கேன் செய்யப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. நேற்றைய போட்டிக்கு முடிவுக்கு பின் ஹர்திக் பாண்டியா காயம் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இதுகுறித்து கவலைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை, சிறிய வலிதான், ஆனால் இப்படியான காயங்களுக்கு தொடர்ச்சியாக நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும், அவருக்கு தேவையானது செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா காயம் குறித்து பிசிசிஐ தெளிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அவர் எந்த போட்டியில் விளையாட மாட்டார்? எப்பொழுது அணிவுடன் இணைவார் என்று விளக்கமாக கூறப்பட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில், “ஹர்திக் பாண்டியாவை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொல்லி கூறி இருப்பதாகவும், எனவே அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், 22 ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட அணியுடன் செல்ல மாட்டார் என்றும், நேராக 29ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெறும் போட்டிக்கு இந்திய அணி உடன் இணைவார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு நடுவில் ஒரு வாரக்காலம் ஓய்வு இருப்பது, ஹர்திக் பாண்டியா காயம் அடைந்துள்ள நிலையில் மிகவும் நல்ல விஷயமாக மாறி இருக்கிறது. தற்பொழுது ஒட்டுமொத்தமாக அவருக்கு 10 நாட்கள் கிடைக்கும் ஓய்வில், அவரால் முழுமையாகத் திரும்பி வர முடியும் என்று தெரிகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement