
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் - ஸ்மித் படேல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைது முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்டீவன் டெய்லர் 27 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஸ்மித் படேலுடன் இணைந்த கேப்டன் மொனாங்க் படேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மித் படேல் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் 15 ரன்களிலும், மிலிந்த் குமார் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனையடுத்து மொனாங்க் படேலுடன் இணைந்த ஷயான் ஜஹாங்கீரும் அதிரடியாக விளையாடினார்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொனாங்க் படேல் சதமடித்து அசத்த, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷயான் ஜஹாங்கீரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் அமெரிக்க அணி இன்னிங்ஸ் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைக் குவித்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொனாங்க் படேல் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 121 ரன்களையும், ஷயான் ஜஹாங்கீர் 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.