
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது இலங்கை அணியின் வீரா் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகாா் தொடா்பாகக் கடந்த நவம்பர் 6 அன்று சிட்னி காவல்துறையினர் கைது செய்தனா். கடந்த நவம்பர் இரண்டாம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா மீது புகாா் எழுந்தது.
சமூகவலைத்தளம் மூலம் அப்பெண்ணுடன் தனுஷ்கா குணதிலகா தொடா்பு கொண்டாா் எனக் காவல்துறை கூறியது. இங்கிலாந்திடம் தோற்று தொடரிலிருந்து இருந்து வெளியேறிய இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இன்றி நாடு திரும்பியது. நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட்டான தனுஷ்கா காயமடைந்ததால் அடுத்த ஆட்டங்களில் இடம் பெறவில்லை. எனினும் அவர் மாற்று வீரராக அணியில் தொடர்ந்து இடம்பெற்றார்.
பாலியல் புகாா் காரணமாக தனுஷ்கா குணதிலகா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகளுக்காக மூன்று முறை அவருக்கு இடைக்காலத் தடை விதித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். தற்போது மீண்டும் அவருக்குத் தடை விதித்துள்ளது.