
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற இந்லையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து 28 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான பில் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் அரை சதமடித்து அசத்தினர். மேற்கொண்டு அவர் 47 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அவருக்கு துணையாக விளையாடிய ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.