
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்தள்ளது. ஏனெனில் சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா 9 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதியில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து 10 தொடர்ச்சியான சாதனை வெற்றிகளை பதிவு செய்தது.
மேலும் அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடிய நல்ல ஃபார்மில் இருந்ததன் காரணமாக 2011 போல கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினார். ஆனால் மீண்டும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை நழுவ விட்டது.
அதனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை சொந்த மண்ணில் நிறுத்தி கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை இந்தியா தவற விட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் வேதனையாகவும் அமைந்தது. மறுபுறம் முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா அதன் பின் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.