
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளது. ஏனெனில் இது டேவிட் வார்னர் விளையாடும் 100ஆவது சர்வதேச டி20 போட்டியாகும். இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அனை மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 அல்லது அதாற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் எனும் வரலாற்று சாதனையை படைக்கவுள்ளார்.