
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்டுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தை வெடிக்கச் செய்வதாகக் கூறி டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு (டிடிசிஏ) இன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்-இடம் தெரிவித்தார். அந்த மின்னஞ்சலில், "உங்கள் மைதானத்தில் ஒரு குண்டு வெடிக்கும். இந்தியாவில் பாகிஸ்தானின் உறுதியான ஸ்லீப்பர் செல் செயல்பட்டு வருகிறது. இந்த வெடிப்பு, ஆபரேஷன் சிந்தூருக்கு நாங்கள் பழிவாங்கும் செயலாக இருக்கும்" என்று இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் மின்னஞ்சல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பகிறது. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய போட்டிகளை விளையாடி வந்தது. மேலும் எதிர்வரும் மே 11ஆம் தேதி இந்த மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுவதாக இருந்தது.