தனிப்பட்ட காரணத்தினால் வீடு திரும்பிய தீபக் சஹார்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் தீபக் சஹார் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி தரப்பில் கிறிஸ் க்ரீன் நீக்கப்பட்டு, நேதன் எல்லீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியின் தீபக் சஹார் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகேஷ் குமார் திருமணம் காரணமாக திடீரென விடுப்பு எடுத்ததை தொடர்ந்து இந்திய அணியின் இளம் வீரர் தீபக் சஹார் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பாக தீபக் சஹார் விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். பவுலிங் ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸை நிரூபித்ததன் காரணமாக, தீபக் சஹர் உடனடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
Trending
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் விளையாடிய தீபக் சஹார், அப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 44 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் அவரது வீசிய 2ஆவது ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்தும், அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் தீபக் சஹர் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், தீபக் சஹர் அவசர மருத்துவ தேவை காரணமாக வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இதனால் தீபக் சஹார் மீண்டும் காயத்தில் சிக்கியுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு தீபக் சஹார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரென வீடு திரும்பியுள்ளது பல்வேறு குழப்பங்களையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now