தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?
இந்திய வீரர் தீபக் சஹார்ன் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் தீபக் சஹார் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் 5ஆவது டி20 போட்டியில் தீபக் சஹார் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், தீபக் சஹார் குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தீபக் சஹார்ன் தந்தை மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தீபக் சஹரின் தந்தை லோகேந்திர சிங் சஹாருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.
Trending
அதன்பின் தீபக் சஹாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர் பெங்களூருவில் இருந்து விமானம் வாயிலாக டெல்லி சென்று, அங்கிருந்து காரிலேயே அலிகார் சென்றுள்ளார். தீபக் சஹாரின் தந்தைக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால், இன்னும் ஐசியூவிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தீபக் சஹார் பேசுகையில், “தந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். 5ஆவது டி20 போட்டியில் ஏன் விளையாடவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கு என் தந்தை தான் முக்கியம். நான் கிரிக்கெட் வீரராக உருவாவதற்கு அவர் தான் காரணம். அவரை இந்த நிலைமையில் விட்டுவிட்டு என்னால் விளையாட முடியாது.
என் தந்தையின் உடல்நிலையில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்ட பின், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை தொடங்குவேன். இதுகுறித்து தேர்வு குழு மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரிடமும் பேசிவிட்டேன். தற்போதைய சூழலில் என் தந்தையின் உடல்நிலை எனக்கு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தீபக் சஹர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் தந்தையின் உடல்நிலை காரணமாக அவர் தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கு திரும்பிய தீபக் சஹர், தந்தையின் உடல்நிலை காரணமாக அடுத்த தொடரிலேயே விலகவுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now