
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்து அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி நேற்றைய போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் 46 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவும், 43 ரன்களில் ரைலீ ரூஸோவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 25 ரன்களையும், சாம் கரண் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.