
இலங்கையில் நடைபெற்று வரும், இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியும் சமபலத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெறவுள்ளார்.