
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், கீரன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் இத்தொடரில் இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரஹ்கீம் கார்ன்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 15 ரன்களுக்கும், ரஹ்கீம் கார்ன்வால் 19 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய அலிக் அதானாஸ் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 26 ரன்களுக்கும், கதீம் அலீன் 11 ரன்களுக்கும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மில்லர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.