
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தியது.கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே மற்றும் விருந்த தினேஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 66 ரன்களைக் கடந்த நிலையில், விருந்த தினேஷ் 16 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் சேர்த்த கையோடு கிரண் நவ்கிரேவும் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் தீப்தி சர்மா 7 ரன்களுக்கும், தஹ்லியா மெக்ராத் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீராங்கனை கிரேஸ் ஹாரிஸும் 12 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 118 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்வேதா செஹ்ராவத் - அறிமுக வீராங்கனை சினெல்லே ஹென்றி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர்.