
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த சீசனில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகளும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய 3 அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் 5 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது.
இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆடாததால் டேவிட் வார்னர் கேப்டன்சி செய்கிறார். ரிஷப் பந்த் ஆடாததால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமடைந்துள்ளது. ஓபனிங்கில் பிரித்வி ஷாவும் சரியாக ஆடுவதில்லை. 6 போட்டிகளில் வெறும் 47 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் பிரித்வி ஷா. மிட்செல் மார்ஷ், ஃபிலிப் சால்ட் ஆகியோரும் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை.